Tuesday, January 06, 2009

503. ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப - TPV21

திருப்பாவை இருபத்தொன்றாம் பாடல்

உலகிற்கு பேரொளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!"

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.


சுரந்த பாலை ஏந்திய குடங்கள் பொங்கி வழிய, வள்ளலைப் போன்று தவறாது பாலைச் சுரக்கும் பெரும்பசுக்கள் ஏராளம் உடைய நந்தகோபனின் திருமகனே! தூக்கக் கலக்கத்திலிருந்து விடுபடுவாயாக! வலிமையும், கருணையும் ஒருசேரக் கொண்டவனே! மிக்க பெருமை வாய்ந்தவனே! பூமியில் அவதாரமெடுத்த, ஒளிமிக்க வடிவம் கொண்டவனே! எழுந்திருப்பாயாக!

உன் வலிமையினைக் கண்ட மாத்திரத்தில் தங்கள் வலிமையை இழந்து,உன் திருமாளிகை வாசலே கதியென்று வந்து உன் திருவடிகளில் சரணடையும் பகைவர்களைப் போல உன்னைப் போற்றித் துதி பாடிய வண்ணம் நாங்கள் வந்துள்ளோம்! அருள் புரிவாயாக!

பாசுரச் சிறப்பு:

ஆச்சார்யனையும், பிராட்டியையும் சரணடைந்து அவர்களின் பரிபூர்ண அருள் பெற்ற பின்னரும், ஒரு வைணவ அடியவருக்கு பரமன் திருஉள்ளம் வைத்தால் மட்டுமே முக்தி கைகூடுகிறது. அதை நன்கு உணர்ந்த ஒரு பக்தனின் சரணாகதித்துவம் இப்பாசுரத்தில் போற்றப்பட்டுள்ளது!

இப்பாசுரத்தில் கண்ணனை எழுப்ப கோபியரோடு நப்பின்னையும் சேர்ந்து கொள்கிறாள். பரமனை எழுப்பி கோபியரின் கோரிக்கையை அவனிடம் எடுத்துச் சொல்லி பரிந்துரைக்க சரியான சமயம் வேண்டி தான் காத்திருந்ததை நப்பின்னை கோபியரிடம் தெளிவுபடுத்துகிறாள்!

இதைக் கேட்ட கோபியர் மிக்க மகிழ்வுற்று, இன்னும் முனைப்போடு கண்ணனை "ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!" என்று பக்திப் பேருவகையோடு போற்றிப் பாடுகின்றனர். ஆயர் குலத்தினில் ஒருவனாக கண்ணன் வாழ்ந்தாலும், அவனது பரம்பொருள் தன்மையானது "உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே" என்ற விவரிப்பின் வாயிலாக இப்பாசுரத்தில் வெளிப்பட்டுள்ளது!

அன்னங்கராச்சார் சுவாமிகள், ஒரு ஆச்சார்யனுக்கும் (குரு) நெருக்கமான சீடனுக்கும் உள்ள உன்னதமான உறவைப் போற்றுவதே இப்பாசுரத்தின் உட்கரு என்று கூறுவார். அவர் மேலும், ஆச்சார்யனுக்கு உதாரணமாக எம்பெருமானாரையும் (ராமானுஜர்) உத்தம சீடர்களுக்கு உதாரணமாக கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார் போன்றோரை குறிப்பிட்டுள்ளார்.

"மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்" எனும்போது, சீடர்கள் தங்கள் பகவத் (பரமன் சார்) பாகவத(அடியவர் சார்) அனுபவங்களையும், ஞானத்தையும் மிகத் தாராளமாக, அதே சமயம் தங்கள் ஆச்சார்ய உபதேசங்களோடு ஒத்துப் போதும் (மாற்றாதே!)வகையில், பகிர்ந்து கொள்ளும் (உலகெல்லாம் பரப்பும்) தன்மையைக் குறிப்பில் உணர்த்துகிறது! எம்பெருமானரே, ஸ்ரீபாஷ்யத்தின் தொடக்கத்தில், இதை (அதாவது, உரைகள் எழுதும்போது மனம் போன போக்கில் விளக்கங்களைச் சொல்வது தவறானது!) வலியுறுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டியது. அதனால், "மாற்றாதே" என்பது "ஏமாற்றாதே" என்று கூட கொள்ளலாம்!

"பால் சொரியும்" எனும்போது பாலின் வெண்மையைப் போன்ற ஞானத்தூய்மையின் தன்மை வெளிப்படுகிறது. இங்கே பசுக்கள் என்பது ஆச்சார்யன், சீடன் என்று இருவரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். ஒரு நல்ல சீடன் தானே பின்னர் ஆச்சார்யனாகிறான்!

இப்பாசுரத்தில் நான்கு ஆச்சார்ய-சிஷ்ய (குரு-சீடன்) தலைமுறைகள் சொல்லப்பட்டுள்ளன!

'ஏற்ற கலங்கள்' முதல் தலைமுறையையும், 'வள்ளல் பெரும்பசுக்கள்' இரண்டாம் தலைமுறையையும், 'ஆற்றப்படைத்தான்' மூன்றாம் தலைமுறையையும், 'மகனே' நான்காம் தலைமுறையையும் குறிப்பில் உணர்த்துவதாம்.

பாசுர உள்ளுரை:

ஊற்றமுடையாய் - தன்னிடம் சரணடைந்தவரின் குற்றம் குறைகளை ஆராயாத பெருமாளின் திருக்குணம் உணர்த்தப்படுகிறது

பெரியாய் - தயையும் வலிமையும் ஒரு சேர அமைந்த தயாநிதியும், பராக்கிரமசாலியும் ஆவான் பரமன். அடியவரை ரட்சிக்க இவ்விரண்டும் அவசியமில்லையா!

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே - பகவான் இப்பூவுலகில் எடுத்த அவதாரங்களையும், தோற்ற நிலைகளையும் குறிக்கிறது.

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! - இவ்வாக்கியத்தில் உள்ள 5 பதங்களுக்கு அபினவ தேசிகன் சுவாமிகள் அழகான விளக்கம் அளித்துள்ளார்.

ஊற்றம் உடையாய்! - பர(த்துவ) வாசுதேவனாக, அவனது (உலகம் மற்றும் உயிர்கள்) படைக்கும் தொழிலை போற்றும் உட்குறிப்பாம்.

பெரியாய்! - பரமனது 4 வியூகத் தோற்ற நிலைகளை குறிக்கிறது.

உலகினில் - ஸ்ரீராமன், கிருஷணன் என்று பரமன் எடுத்த பூவுலக (விபவ அவதாரங்களைச் சொல்கிறது.

தோற்றமாய் நின்ற - இப்பூலவுலகில் உள்ள வைணவ திவ்ய தேசங்களில், பரமன் அர்ச்சாவதார (கோயில்களில் வழிபடப்படும் வடிவம்) நாயகனாக அருள் பாலிப்பதைக் குறிக்கிறது.

சுடரே! - பரமன் ஒளி வடிவில் அந்தர்யாமியாக(எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) ஜீவாத்மாக்களில் இருப்பதைக் குறிக்கிறது!

மாற்றார் வலி தொலைந்து - அடியவர் அகந்தை, உலகப்பற்று, பொறாமை, தீய நட்பு என்று அனைத்தையும் துறந்து

உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன்னடி பணியும் - உன் கல்யாண குணங்களால் கவரப்பட்டு, நீயே (பரமனே) உபாயமும் (வழி) உபேயமும் (முக்தி) என்று உணர்ந்து, வேறு கதியின்றி உன் திருவடிகளில் சரண் புகுந்தோம்

போற்றியாம் வந்தோம் - பல்லாண்டு பாடுவதை / மங்களாசாசனம் செய்வதைக் குறிப்பதாம்.

இப்பாசுரத்தின்படி, பரமனின் திருவடி நிழலுக்கு வெகு அருகில் கோபியர் வந்து விட்டனர்!

எ.அ.பாலா

2 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

உயிரோடை said...

படித்"தேன்". தேன் பேன்ற பதிவு.
//இப்பாசுரத்தில் கண்ணனை எழுப்ப கோபியரோடு நப்பின்னையும் சேர்ந்து கொள்கிறாள்//
இது புரியவில்லை எதை வைத்து சொல்கின்றீர்கள் என்று
//சீடனுக்கும் உள்ள உன்னதமான உறவைப் போற்றுவதே இப்பாசுரத்தின் உட்கரு என்று கூறுவார்//
ஆஹா
//பரமனின் திருவடி நிழலுக்கு வெகு அருகில் கோபியர் வந்து விட்டனர்!//
நானும் தான்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails